ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கு உதவிய தொழிலதிபர் : நெகிழ்ச்சி சம்பவம்

கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லாததால் சீட் கிடைத்தும் என்னால் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏழை மாணவியின் மருத்துவ கனவு
Published on: 

தூத்துக்குடி,

ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கு தொழிலதிபர் உதவியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ராவுத்தர் பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி. இவர் தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் 462 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் சீட் கிடைத்துள்ளது. இது குறித்து மாணவி கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எனது அப்பா அம்மா என்னை மிகவும் கஷ்டப்பட்டு தான் படிக்க வைக்கிறாங்க. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை அப்பா மட்டும் தான் வேலைக்கு சென்று என்னை எனது தங்கை மற்றும் அம்மாவின் மருத்துவ செலவை பார்த்து வருகிறார். தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த எனக்கு மருத்துவ படிப்பிற்காக வருடத்திற்கு 4 லட்சம் கட்டணம் கேட்கின்றனர்.இந்த நிலையில் கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லாததால் சீட் கிடைத்தும் என்னால் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல் அமைச்சர் விஜய் அண்ணா மற்றும் தமிழக அரசிடம் தனது மருத்துவ படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

உதவிய தொழிலதிபர்

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை பார்த்த விருதுநகர் மாவட்டம் ராவுத்தன் பட்டியை சேர்ந்த எம்.ஜி.எஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனரான பாலமுருகன் மாணவியின் வீட்டிற்கு நேற்று வந்துள்ளார். இவர் மாணவியின் முதலாமாண்டு மருத்துவ படிப்பிற்கான தொகையை கொடுத்துள்ளார். மேலும், மாணவியின் மருத்துவ படிப்பிற்கான முழு கல்வி தொகையையும் ஏற்றுக்கொள்வதாக வாக்களித்துள்ளார். இச்சம்பவம் மாணவியின் குடும்பத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com