

கோவை,
வடமாநில தொழில் அதிபரை கடத்தி ரூ.26 லட்சம் பணம் மற்றும் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காளம் ஹூக்ளி அருகே மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேப்ஜித் ரானா (வயது 25). தொழில் அதிபர். இவருக்கு கோவையை சேர்ந்த ஆனந்த குமார் என்பவர் இணையதளம் மூலம் அறிமுகம் ஆனார். அவரிடம் தேப்ஜித் ரானா, தான் திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதாக கூறினார்.
இந்த நிலையில் கடந்த மாதம் தேப்ஜித் ரானா கோவை வந்தார். அவரை ஆனந்தகுமார், அவருடைய நண்பர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, அவரிடம் செந்தில்குமார் ரூ.1 கோடி கடன் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த வாரம் தேப்ஜித் ரானா தனது நண்பர்களுடன் கோவை வந்து பீளமேடு அருகே ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதை அறிந்த செந்தில்குமார், ஆனந்தகுமார் உள்பட 10 பேர் அவரை பார்க்க சென்றனர்.
அப்போது அந்த அறையில் தேப்ஜித் ரானா மற்றும் அவருடைய நண்பர்களான சித்தார்த், ஆதர்ஷ்குமார் ஆகியோர் இருந்தனர். உள்ளே சென்றதும் அந்த 10 பேரும் சேர்ந்து தொழில் அதிபர் உள்பட 3 பேரையும் காரில் ஏற்றி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த கும்பல் கத்தி முனையில் தேப்ஜித் ரானாவிடம் ரூ.26 லட்சத்து 54 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகை மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான 8 பேர் யார்? அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் தேப்ஜித் ரானா மற்றும் பணத்தை பறித்ததாக கூறப்படும் செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் தங்களிடம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணத்தை கொடுப்பதாக தேப்ஜித்ரானா கூறி உள்ளார்.
அதை நம்பிய செந்தில்குமார், ஆனந்தகுமார் உள்பட 10 பேர் ரூ.80 லட்சத்தை தேப்ஜித் ரானா, சித்தார்த் ஆகியோரிடம் கொடுத்து உள்ளனர். அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் 2 பேரும் மேற்கு வங்காளத்துக்கு சென்று விட்டு கோவை வந்து உள்ளனர்.
இதை அறிந்த ஆனந்தகுமார், செந்தில்குமார் உள்பட 10 பேரும் சென்று பணத்தை திரும்ப கேட்டு உள்ளனர். அதை கொடுக்காததால் கடத்திச்சென்று பணத்தை பறித்ததாக 2 பேரும் தெரிவித்து உள்ளனர். ஆனால் தேப்ஜித் ரானா, தன்னை கடத்திச்சென்று பணத்தை பறித்ததாக கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மையாக நடந்தது என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.