ஜெம் வீரமணி வழக்கில் தொழிலதிபர் பிரகாஷ் முன்ஜாமீன் மனு: நவம்பர் 20-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

விசாரணைக்கு ஆஜராக பிரகாசுக்கு போலீசார் சம்மன் அனுப்பப்பட்டது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி
Published on: 

சென்னை,

ஜெம் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷ் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 20-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்குகளை சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உதவியதாக தொழிலதிபர் பிரகாஷ் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக பிரகாசுக்கு போலீசார் சம்மன் அனுப்பப்பட்டது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் தான் கைது செய்ய வாய்ப்பு உள்ளதால் வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என பிரகாஷ் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, பிரகாஷ் தரப்பில் முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்த போது, போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு பதிலளிக்க பிரகாஷ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை நவம்பர் 20-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

X