

சென்னை
சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழகத்தின் 10 தொழிற் சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
23 தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், பஸ் தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை கை விட்டுப் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசும், ஐகோர்ட்டும் மீண்டும், மீண்டும் அறிவுறுத்தி வருகின்றன.
பஸ் தொழிலாளர்கள் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறை வேறும் வரை ஸ்டிரைக்கை தொடர அவர்கள் முடிவு செய்தனர். இதனால் பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.
முதலில் பணிக்கு வராமல் புறக்கணித்த பஸ் தொழிலாளர்கள் நேற்று தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்து டெப்போக்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று பஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் தொழிலாளர்கள் அடுத்தடுத்து தினமும் ஆர்ப்பாட்டத்தை தொடர்வதால் அவர்களது வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பஸ்கள் ஓடாததால், தமிழகம் முழுவதும் பொது மக்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், வெளியூர் செல்பவர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் என அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். பஸ்கள் இல்லாததால் ரெயில், கார், ஷேர் ஆட்டோக்களுக்கு அவர்கள் மாறியுள்ளனர்.
சென்னையில் மட்டும் சுமார் 1 லட்சம் பயணிகள் பஸ்களை கைவிட்டு ரெயில் பயணத்துக்கு மாறியுள்ளனர். ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் பெண் பயணிகளுக்கு சிரமம் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் பஸ்கள் ஓடாததை பயன்படுத்தி தனியார் பஸ் கள், ஆட்டோக்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன. இது பொது மக்களின் தினசரி பயணச் செலவை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது. இதனால் நடுத்தரப்பிரிவு மக்கள், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் விதித்த கெடு நேற்று மாலையுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் விளக்கம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் பஸ் ஊழியர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று வரை சுமார் 60 ஆயிரம் பஸ் தொழிலாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 18 ஆயிரம் பஸ் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 5,600 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று வரை 68 பஸ் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் ஸ்டிரைக்கின் போது, சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக கூறி அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறி உள்ளனர். இதனால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதி, அவஸ்தை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
#BusStrike | #TransportWorkers | #TNBusStrike