கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் - பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்குவதற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமரிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் - பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
Published on

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி 4-வது முறையாக நேற்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுவரை நடைபெற்ற காணொலி காட்சி ஆலோசனை கூட்டங்களில் பேசாத முதல்-மந்திரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார்கள். நேரமின்மை காரணமாக மற்ற மாநில முதல்-மந்திரிகள் தங்களது கருத்துகளை பிரதமருக்கு பேக்ஸ் மூலமாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அதன்படி, பேக்ஸ் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தும் அதே நேரத்தில், ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான பணிகள், கட்டுமான நடவடிக்கைகள், பாசனம் மற்றும் சில பாதுகாப்பு பணிகளை அனுமதித்து இருக்கிறோம்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்தை ஊராட்சி செயலாளர்கள் மூலம் பணமாக அளிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். பணம் கையில் கிடைத்துவிட்டால், அவர்கள் வங்கிகளில் கூட்டமாக கூடும் நிகழ்வு தவிர்க்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை 87 ஆயிரத்து 605 மாதிரிகளை பரிசோதித்ததில் 1,885 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோயாளி இறப்பு சதவீதம் 1.2 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 1,020 நோயாளிகள் அதாவது 54 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர் என்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனைக்காக 30 அரசு மற்றும் 11 தனியார் சோதனைக் கூடங்கள் உள்ளன. இதன் அளவு, நாளொன்றுக்கு 7,500 பரிசோதனைகள் என்றுள்ளது. இந்த எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பி.சி.ஆர். சோதனை உபகரணங்களை மத்திய அரசு அனுப்ப வேண்டும்.

நுகர்வோருக்கு நேரடியாக வேளாண் உற்பத்தியை விவசாயிகள் கொண்டு சேர்க்கும் வகையில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு போக்குவரத்து மானியத்தை அளிக்க முன்வர வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வருமான இரட்டிப்பாகும்.

இந்த நிலையில் சில கோரிக்கைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதியை காணொலி காட்சி மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் கோரியிருக்கிறேன். அந்த தொகையை உடனே அனுமதிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி.பி.யில் நிதிப்பற்றாக்குறை அளவை 3 சதவீதத்தில் இருந்து 2019-20 மற்றும் 2020-21-ம் ஆண்டில் 4.5 சதவீதமாக உயர்த்த வேண்டும். 2019-20-ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட 33 சதவீத கூடுதல் கடன் அளவை, 2020-21-ம் ஆண்டுக்கும் நீட்டிக்க வேண்டும்.

கடந்த டிசம்பர், ஜனவரிக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை உடனடியாக அனுமதிக்க வேண்டும். நிதி கமிஷன் பரிந்துரைத்துள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தில் 50 சதவீதத்தை உடனே வழங்க வேண்டும்.

மருத்துவ மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்குவதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை மானியமாக வழங்க உடனடியாக தமிழகத்துக்கு அனுமதிக்க வேண்டும்.

மத்திய அரசின் திட்டத்துக்குக் கீழ் வரும் பயனாளிகள் உள்பட அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கும் வகையில் கூடுதலாக அவற்றை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அரிசி கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில் சி.எம்.ஆர். என்ற நெல் அரவை மானியத் தொகை ரூ.1,321 கோடியை வழங்க வேண்டும்.

எரிசக்தி பிரிவில் உள்ள பல்வேறு சுமைகளை நீக்கும் வகையில் நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் சிறு, குறு தொழிற்சாலைகளும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களும் அதிகமாக உள்ளனர். அந்த தொழிலாளர்கள் ஊதியத்தை பெறும் வகையிலும், பி.எப்., இ.எஸ்.ஐ. பாக்கிகளைச் செலுத்தும் வகையில் அந்தப் பிரிவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். முன்கூட்டி வழங்கும் ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி ஆகியவற்றை சிறு குறு தொழில்களின் நன்மைக்காக 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com