தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி ஆடைகளை வாங்குங்கள்: அமைச்சர் மரிய வில்சன் வேண்டுகோள்

திருநெல்வேலியில் மாநில கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை தமிழக நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் தொடங்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி ஆடைகளை வாங்குங்கள்: அமைச்சர் மரிய வில்சன் வேண்டுகோள்.
Published on: 

திருநெல்வேலி,

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் அனைவரும் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

கைத்தறி கண்காட்சி, விற்பனை; அமைச்சர் மரிய வில்சன் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை ஸ்ரீஐயப்பன் மகாலில் நேற்று (22.10.2026) நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன், கைத்தறி துணிநூல் மற்றும் கதர்துறை அரசு செயலர் லில்லி, மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தலைமையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டியார்பட்டி நாராயணன் (நாங்குநேரி), கிறிஸ்டோபர் (ராதாபுரம்) ஆகியோர் முன்னிலையில் மாநில கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

15 நாட்கள் கைத்தறி கண்காட்சி, விற்பனை

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை மற்றும் மத்திய அரசு ஜவுளித்துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் மூலமாக மாநில கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை ஸ்ரீ ஐயப்பன் மகாலில் 22.10.2026 முதல் 5.11.2026 வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலுள்ள 120 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்/அமைப்புகள் பங்கு பெற்றுள்ளன. இக்கண்காட்சி மூலம் ரூ.100 கோடி அளவிற்கு அளவிலான விற்பனை எதிர்நோக்கப்படுகிறது.

அனைத்து ரகங்களுக்கும் 30 சதவீதம் வரை தள்ளுபடி

இக்கண்காட்சியில் காஷ்மீர் சால்வைகள், உத்தரகாண்ட் பெட்ஷீட்கள், துப்பட்டாக்கள், மகராஷ்டிரா பைதானி சேலைகள், மங்களகிரி சேலைகள், வெங்கடகிரி சேலைகள், பெங்கால் காட்டன் சேலைகள், காஞ்சிபுரம் மற்றும் திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், சேலம் பட்டு வேஷ்டிகள், திருநெல்வேலி செடிபுட்டா சேலைகள் மற்றும் ஆர்ட்சில்க் சேலைகள், பரமக்குடி பம்பர் காட்டன் சேலைகள், ஈரோடு மற்றும் கரூர் பெட்சீட்டுகள், போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள், ஸ்கிரீன் துணிகள், திருப்பூர் மற்றும் மதுரை சுங்குடி காட்டன் புடவைகள், குறிஞ்சிப்பாடி லுங்கிகள், கோவை கோரா காட்டன் சேலைகள், திண்டுக்கல் சேலைகள் மற்றும் நாகர்கோவில் வடசேரி கைத்தறி வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள் போன்ற ஏராளமான ரகங்கள் காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து ரகங்களுக்கும் 30 சதவீதம் வரை தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி ஆடைகளை வாங்குங்கள்

கைத்தறி நெசவாளர்களின் உழைப்பையும் கலைத்திறனையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், கைத்தறி ஆடைகளை நேரடியாக வாங்குவதற்கான வாய்ப்பையும் இக்கண்காட்சி ஏற்படுத்தும். மேலும் கைத்தறி நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும். உள்நாட்டு கைத்தறிப் பொருட்களின் விற்பனை வளர்ச்சிக்கும் இக்கண்காட்சி உறுதுணையாக அமையும். எனவே பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு பாரம்பரிய கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அமைச்சர் மரியவில்சன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, திருநெல்வேலி வருவாய் அலுவலர் வித்யா, உதவி இயக்குநர் (கைத்தறித்துறை) ஆரோக்கியராஜ், துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com