

சென்னை
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்காக உதவும் மருந்தான ரெம்டெசிவிர்' மருந்துக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் இந்த மருந்தை வெளியில் வாங்கி வருமாறு பரிந்துரைக்கின்றனர். இதனை காரணம் காட்டி, வெளி சந்தைகளில் ரெம்டெசிவிர்' மருந்து பன்மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தமிழக மருத்துவ பணிகள் கழகம் மூலம் ரெம்டெசிவிர்' மருந்து கொள்முதல் செய்யப்பட்டு, நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில், கடந்த 26-ந் தேதி முதல் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு, ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்தை வாங்குவதற்கு நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, கடலூர், சேலம், விழுப்புரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், 3-வது நாளான நேற்றும் ரெம்டெசிவிர்' மருந்து வாங்க அதிகாலை 2 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்றும், ஏராளமானோர் மருந்து கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.
இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டிசிவிர் மருந்தை வாங்க நீண்ட வரிசையில் நீன்றனர். அதிகாலை 2 மணி முதல் மருத்துவக் கல்லூரி வாயிலில் ஆயிரக்கணக்கானபேர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்
வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அனைவரும் ரெம்டெசிவிர் மருந்தை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இது சம்பந்தமாக 2 கருத்தை தெரிவிக்கிறேன். ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்து இல்லை. உலக சுகாதார நிறுவனமும், தமிழக சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ள நெறிமுறைகளில் இது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து போட்டுக்கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கலாம். மற்றப்படி இந்த மருந்தை போட்டால்தான் கொரோனாவில் இருந்து குணமடைவோம் என்ற சூழ்நிலை இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே இது தேவைப்படலாம்.
யாருக்கு தேவையோ, அவர்களுக்கு டாக்டர்கள் கொடுத்து விடுவர்.இந்த மருந்து ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் இருப்பு உள்ளது. இல்லாத மருத்துவமனைகளின் நிர்வாகத்திற்கு, அரசின் கோரிக்கை இது தான்.ஒரு மருத்துவமனை நடத்துகிற உங்களால், மருந்து வாங்கி கொடுக்க முடியவில்லை என்ற நிலையில், சாமானிய மனிதர்களிடம், மருந்து சீட்டை கொடுத்து, மருந்து வாங்கி வாருங்கள் என, சொல்வது சரியான முன்னுதாரணமாக இருக்காது.
உங்களால் வாங்க முடியாதபோது, அவர்கள் எங்கே போய் வாங்குவர். இதனால், தேவையில்லாத பதற்றம் ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் யாரும் ரெம்டெசிவிர் மருந்தை தேடி அலைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை தேவையான அளவுக்கு ரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளது. சுகாதாரத்துறை வழிமுறைகளின்படி யாருக்கு இந்த மருந்து தேவைப்படுகிறதோ அவர்களுக்கு டாக்டர்கள் வழங்குகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து இருப்பதை தமிழக அரசு, உறுதி செய்வது மட்டுமல்லாமல், தேவைப்படும் நபர்களுக்கு, அதாவது அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தாலும், அவர்களது மருத்துவ ஆவணங்கள், டாக்டர்களின் பரிந்துரை சீட்டு காண்பித்து தேவைக்கு ஏற்ப பெற்று கொள்ளும் வகையில் தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் வழங்கி வருகிறோம்.
இப்போதைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு விட்டது. தேவைக்கு ஏற்ப இதனுடையை எண்ணிக்கைகள் கூடலாம் இவ்வாறு அவர் கூறினார்.