

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பணம் கொடுக்காமல் ஜனநாயக ரீதியாக இடைத்தேர்தல் நடந்துள்ளது. கடந்த கால இடைத்தேர்தல் எல்லாம் எடைத்தேர்தலாக, எடைக்கு எடை பணம், பொருள், மக்களை ஆடுகள், மாடுகள் போல சந்தையில் அடைத்து வைத்து, மதுவைக் கொடுத்து, உணவைக் கொடுத்து வாக்களிக்க வைத்து வெற்றி பெற்ற கட்சிகளை நாம் பார்த்தோம்.
ஆனால் இன்று பணம் கொடுக்காமல் பிரசாரம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஜனநாயக ரீதியாகப் பிரசாரம் செய்து நடைபெற்ற இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், இந்த இரண்டு தொகுதிகளில் ஐந்து மாதங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு வெற்றிகளும் ஆளும் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
அதேவேளையில், சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக, சுயபரிசோதனை செய்ய வேண்டும். நான் அவர்களைத் தவறாகச் சொல்லவில்லை. நல்ல எண்ணத்தோடு சொல்கிறேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற கட்சி இன்று மூன்றாவது இடம். அதிமுகவுக்கு நல்ல வகையான ஆலோசனையாகக் கூறுகிறேன். தவறான எண்ணத்தில் சொல்லவில்லை.தவறான எண்ணத்தில் சொல்லவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக நீடிக்கிறது. ஞானேஷ்குமார் விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும். வாக்களிப்பது என்பது அடிப்படை உரிமை மற்றும் கடமையாகும். கோடிக்கணக்கானவர்கள் வாக்கு போட முடியாத சூழல் இருந்தால் முழுமையாக விசாரணை நடத்தி தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.