6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் தீவிரம்

பிற மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் தீவிரம்
Published on

சென்னை,

6 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

கட்சி தாவல் சட்டம்

தமிழக சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் மே மாதம் 4-ந் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. 59 இடங்களிலும், அ.தி.மு.க. 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதுதவிர, காங்கிரஸ்-5, பா.ம.க.-4, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, வி.சி.க.-2, பா.ஜனதா-1, அ.ம.மு.க.-1, தே.மு.தி.க.-1 ஆகிய கட்சிகளும் வெற்றி பெற்றன.

ஒரு கட்சி ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்படி, த.வெ.க. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி (கிழக்கு) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், திருச்சி (கிழக்கு) தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

விசாரணை

இதற்கிடையில், அ.தி.மு.க.வில் இருந்த 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோர் தலைமையில் தனி அணியாகச் செயல்பட்டு, நம்பிக்கை தீர்மானத்தின் போது த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே, அவர்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்தார்.

அதற்கிடையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் கடந்த மாதம் 25-ந் தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, அதே நாளில் த.வெ.க.வில் இணைந்தனர். அதற்கு மறுநாள் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தார்.

இந்த நால்வரும் சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. அணியைச் சேர்ந்தவர்கள். பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கும், சி.வி.சண்முகம் தலைமையிலான அணிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 21 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அதே நேரத்தில், ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். இது தொடர்பாக சபாநாயகர் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் (விராலிமலை) தனது எம்.எல்.ஏ. பதவியை கடந்த 16-ந் தேதி ராஜினாமா செய்தார்.

ஏற்பாடுகள்

இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதுகுறித்த தகவலை சட்டசபைச் செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு தொகுதி காலியானால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதியாகும்.

அதன்படி, இன்னும் 5 மாத கால அவகாசம் இருந்தாலும், இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு (கலெக்டர்கள்) சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. எனவே, விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 6 தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே, விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com