மாநகராட்சி உத்தரவையடுத்து சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவையடுத்து சென்னையில் 9 இடங்களில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டது.
மாநகராட்சி உத்தரவையடுத்து சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு
Published on

சென்னை,

சென்னையில் உள்ள 9 இடங்களில் உள்ள அனைத்து கடைகளை நேற்று (சனிக்கிழமை) முதல் வரும் 9-ந் தேதி வரை மூட பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று காலை சென்னை தியாகராயநகர் ரெங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, ஜாம்பஜார் மார்க்கெட் சாலை பகுதிகள், பாரிமுனை குறளகம், என்.எஸ்.சி.போஸ் சாலை பகுதிகள், ராயபுரம் மார்க்கெட், கல்மண்டபம் சாலை பகுதிகள், அமைந்தகரை மார்க்கெட் பகுதிகள், புல்லா அவென்யூ சாலை, செங்குன்றம் மார்க்கெட் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இரவு நேரம் கடைகள் அடைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அதுகுறித்து எதுவும் அறியாத வியாபாரிகள் பலர் நேற்று காலை கடைகளை திறக்க வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் கடைகள் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து வியாபாரிகள் தங்களது கடைகளை திறக்காமல் சென்றனர். சென்னை பட்டினம்பாக்கம் பகுதிகளில் போலீசார் வியாபரிகள் கடைகளை திறப்பதை தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்தனர்.

நேற்று சனிக்கிழமை வழக்கமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான தியாகராயநகர், ஜாம்பஜார் மார்க்கெட், திருவல்லிக்கேணி பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. தியாகராயநகர் ரங்கநாதன் தெரு வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் கூட்டமும் குறைவாகவே இருந்தது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டாலும் அந்த பகுதிகளில் உள்ள மருந்தகங்கள் மட்டும் இயங்கின.

விடுமுறை நாள் என்பதால், கடைகள் அடைப்பு குறித்து தெரியாத பொதுமக்கள் பலர் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வந்தனர். கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நேற்று பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com