

சென்னை,
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்பார்த்தபடி, மிகப்பெரிய வெற்றியை வாக்காளர்கள் அ.தி.மு.க. வுக்கு அளித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் சிறப்பான முறையில் பணியாற்றிய அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இடைத்தேர்தல் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடைத்தேர்தல். கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. அப்போது திட்டமிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரோடு கூட்டணி வைத்த கட்சி தலைவர்கள் எல்லாம் பொய்யான பிரசாரத்தை தமிழகம் முழுவதும் பரப்பினார்கள். பொய்யான வாக்குறுதிகளை வாரி இறைத்தார்கள்.
அதனை நம்பி வாக்காளர்கள் வாக்களித்ததால் அவர்கள் (எதிர்க்கட்சியினர்) வெற்றி பெற்றார்கள். இப்போது உண்மை நிலையை வாக்காளர்கள் தெரிந்து கொண்டார்கள். இதனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு அமோகமான வெற்றியை அளித்திருக்கிறார்கள்.
விக்கிரவாண்டி ஏற்கனவே தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்ற தொகுதி. நாங்குநேரி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. இன்றைக்கு அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இந்த வெற்றி ஆளுமைக்கு கிடைத்த வெற்றியா? கட்சிக்கு கிடைத்த வெற்றியா?
பதில்:- இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி.
கேள்வி:- இந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சியினர் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட தேர்தலாக பார்த்தனர்? நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- அவர்களே சொல்லிவிட்டார்களே. 2021-ம் ஆண்டுக்கு முன்னோட்ட தேர்தல், அந்த முன்னோட்ட தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.
கேள்வி: வருங்காலங்களில் இந்தக் கூட்டணி தொடருமா?
பதில்:- தொடரும்.
கேள்வி: இந்த வெற்றி, உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்ற எவ்வாறு நம்பிக்கை கொடுத்துள்ளது?
பதில்:- தற்போது எதிர் அணி, எங்கள் அணி என்று 2 அணி என்றாகிவிட்டது. மக்களும் தீர்மானித்துவிட்டார்கள். அனைத்துக் கட்சிகளாலும் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் கேட்கக்கூடிய இடங்கள் கொடுக்கப்படுமா?
பதில்:- அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக அமர்ந்து அவரவருக்குள்ள வெற்றி வாய்ப்பையெல்லாம் ஆலோசித்து செய்ய வேண்டிய விஷயம். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதற்குத் தகுந்த பதிலை நாங்கள் அளிப்போம்.
கேள்வி:- இந்த வெற்றியின் மூலமாக எதிர்க்கட்சியினருக்கு நீங்கள் சொல்லக்கூடிய கருத்து என்ன?
பதில்: உண்மையைப் பேசினால், உண்மை எப்போதும் நிற்கும். தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பது இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது.
மக்களுக்கு நம்பிக்கை மிக முக்கியம். அந்த நம்பிக்கை இருந்தால் எப்போது வேண்டுமானாலும் வெல்லலாம். ஆனால், தி.மு.க. பொய்யை மட்டும் மூலதனமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தது. அதனால் அவர்கள் இந்த 2 தொகுதிகளையும் இழந்துவிட்டார்கள். அ.தி.மு.க. கூட்டணி மிகச் சிறப்பாக பணியாற்றிய காரணத்தினால் மக்கள் உண்மையை நம்பி வாக்களித்துள்ளார்கள் என்பது தெரிகின்றது.
கேள்வி:- 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா?
பதில்:- நாங்கள் கூட்டணிக்கு மதிப்பு அளிக்க கூடிய இயக்கம். கூட்டணி தர்மத்துக்கு ஏற்றார் போல் நாங்கள் நடந்துக் கொள்வோம். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்பு இந்த கேள்வி எழ வேண்டிய அவசியம் இல்லை. யூகத்தின் அடிப்படையில் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.
கேள்வி:- தமிழக அரசின் திட்டங்களினால் தான் இந்த வெற்றி என்று சொல்கின்றார்களே?
பதில்:- ஆமாம். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அனைத்து இல்லங்கள் தோறும் நாங்கள் கொண்டு சேர்த்தோம். அதுமட்டுமல்லாமல், குடிமராமத்துத் திட்டம், இது வரையிலும் அறிவிக்கப்படாத ஒரு திட்டம். நீர் மேலாண்மை என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழகம் முழுதும் இருக்கின்ற குளம், குட்டை, ஊரணி, ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்படுகின்ற காட்சியைப் பார்க்கின்றோம். நீர்நிலைகளில் எல்லாம் நீர் உயர்ந்திருக்கின்ற நிலையை பார்க்கின்றோம். ஆகவே, எங்கள் அரசு மக்களுக்கு செய்கின்ற நன்மையைப் பார்த்து மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்திருக்கின்றார்கள்.
கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுமா?
பதில்:- விரைவில் கூட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.