

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனப் பணியாளர்கள் கடந்த மார்ச் 3-ம் தேதி தங்களது மேலாளரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். இதற்காகக் கோயில் வளாகத்தில் உள்ள பொது தரிசன வரிசை கட்டடத்தைப் பணி நேரத்தில் தவறாகப் பயன்படுத்தியதுடன், அங்கு கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
விதிமீறல்: மார்ச் 3-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 1.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. அப்போது இரண்டாம் ஷிப்ட் பணிக்கு வந்த ஊழியர்கள், மதியம் 2.30 மணியளவில் தரிசன வரிசை கட்டடத்தின் அறை எண் 5-ல் ஒன்றுகூடி, மாலைகள் மற்றும் பொன்னாடைகள் அணிவித்துத் தங்கள் மேலாளரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.
ஒப்புதல்: இது குறித்துக் கோவில் நிர்வாகம் விளக்கம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் இந்த விதிமீறலை ஒப்புக்கொண்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், பங்கேற்ற மற்ற ஊழியர்களுக்கு அன்றைய நாள் சம்பளம் அபராதமாகப் பிடிக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும், புனிதமான கோவில் வளாகத்தில் இத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கக் கோயில் இணை ஆணையர் பரிந்துரைத்தார். இதனைத் தக்கார் ஏற்று உறுதி செய்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.