

அரியலூர்,
நாம் தமிழர் கட்சி சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் பரப்புரை கூட்டம் நடை பெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இரவு 9.20 மணியளவில் பேச ஆரம்பித்த சீமான் இரவு 10.10 மணி வரை பேசினார். தற்போது தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இருப்பினும், நேற்று முன்தினம் இரவு 10.10 மணி வரை சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டதால், அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம், வேட்பாளர்கள் புகழேந்தி (அரியலூர்), ரேவதி (ஜெயங்கொண்டம்), கீர்த்திவாசன் (குன்னம்), சுகன்யா (பெரம்பலூர்) என மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.