புதுச்சேரியில் பிரசாரம் நிறைவு; சென்னை திரும்பினார் பிரதமர் மோடி

நாளை பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
புதுச்சேரியில் பிரசாரம் நிறைவு; சென்னை திரும்பினார் பிரதமர் மோடி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.

புதுச்சேரி விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை முதல்-மந்திரி ரங்கசாமி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் அஜந்தா சிக்னல் சந்திப்புக்கு சென்ற பிரதமர் மோடி, திறந்த வாகனத்தில் ஏறி 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற்றது. இதில் வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி வாகனத்தின் மேல் நின்றபடி பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, புதுச்சேரியில் பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். நாளை பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று இரவு அவர் சென்னையில் தங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com