புதுச்சேரி, கேரளாவில் பிரசாரம் - அமித்ஷா, ராகுல் காந்தி நாளை சென்னை வருகை

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி, கேரளாவில் பிரசாரம் - அமித்ஷா, ராகுல் காந்தி நாளை சென்னை வருகை
Published on

சென்னை,

புதுச்சேரி மற்றும் கேரளாவில் வரும் 9-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் புதுச்சேரிக்கும், கேரளாவுக்கும் வருகை தந்து தேர்தல் பிரசாரம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் விமானம் மூலம் நாளை மதியம் 3.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டு செல்கிறார்.

பின்னர் புதுச்சேரியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். அதனை தொடர்ந்து, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மாலை 6.10 மணிக்கு சென்னை வந்தடைகிறார். சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து பேசிய பிறகு, விமானம் மூலம் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அவரை காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்கின்றனர். தொடர்ந்து, மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.

பின்னர் சிறிய ரக விமானத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி புறப்பட்டு செல்லும் ராகுல் காந்தி, அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதன் பின்னர், கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் அவர், அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மீண்டும் விமானம் மூலம் டெல்லி திரும்ப உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஒரே நாளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சென்னைக்கு வருகை தர உள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com