திருச்சி கிழக்கில் நாளை பிரசாரம்: விஜய்யின் வாகனத்தை பின்தொடரக்கூடாது - என்.ஆனந்த் அறிவுறுத்தல்

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறு என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சி கிழக்கில் நாளை பிரசாரம்: விஜய்யின் வாகனத்தை பின்தொடரக்கூடாது - என்.ஆனந்த் அறிவுறுத்தல்
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் விஜய்யின் பிரசார வாகனத்தை யாரும் பின்தொடரக்கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய், நாளை (19.04.2026, ஞாயிற்றுக்கிழமை) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு, வயர்லஸ் ரோடு, தென்றல் நகர், கே.கே.நகர், காஜாமலை ரோடு, EVR காலேஜ், SRM ஹோட்டல், கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு வழியாக மாலை 3 மணி முதல் வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவரின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com