வக்கீலை தாக்கி செல்பி சப்-இன்ஸ்பெக்டரின் செயலை மன்னிக்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

வக்கீலை தாக்கி, அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டரின் செயலை மன்னிக்க முடியாது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வக்கீலை தாக்கி செல்பி சப்-இன்ஸ்பெக்டரின் செயலை மன்னிக்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று காலை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு வக்கீல் பெரியசாமி என்பவர் தன்னுடைய கட்சிக்காரருடன் புகார் செய்ய சென்றார். புகாரை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம், வழக்குப்பதிவு செய்யவில்லை. மாறாக, புகார்தாரரை சமரசமாக செல்வதாக எழுதித்தரும்படி கூறியுள்ளார். இதை புகார்தாரர் ஏற்கவில்லை.

மேலும், புகாருக்கு ரசீது (சி.எஸ்.ஆர்.) தரும்படி வக்கீல் பெரியசாமி கேட்டுள்ளார். அதற்காக வக்கீலை கண்மூடித்தனமாக சப்-இன்ஸ்பெக்டர் தாக்கினார். மேலும் வக்கீலை செல்போனில் செல்பி எடுக்கச்சொல்லி, ரத்தம் வடியும் முகத்துடன் இருக்கும் வக்கீலுக்கு பின்னால், அந்த சப்-இன்ஸ்பெக்டர் நின்று படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். மேலும், அந்த செல்பி படத்தை நீதிபதிகளிடம் கொடுத்தார்.

அந்த படத்தை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பிளடர் ராஜகோபாலனிடம் படத்தை காட்டிய நீதிபதிகள், இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. வக்கீலை தாக்கியது மட்டுமல்லாமல், செல்பி போட்டோவையும் சப்-இன்ஸ்பெக்டர் எடுப்பாரா?.

சப்-இன்ஸ்பெக்டரின் இந்த செயலை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்கிறோம். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com