கல்விக்கட்டண விவரங்களை தனியார் பள்ளிகள் வெளியிடலாமே? சென்னை ஐகோர்ட்டு கேள்வி

வருகிற 18-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

கல்விக்கட்டண விவரங்களை தனியார் பள்ளிகள் வெளியிடலாமே? சென்னை ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை

அரசு நிர்ணயித்த கல்விக்கட்டண விவரங்களை, தனியார் பள்ளிகள் தங்களுடைய பள்ளியின் விளம்பர பலகையில் வெளியிடவேண்டும் என்று தகவல் ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், கல்விக்கட்டண விவரங்களை வெளியிடும்படி தனியார் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகள் இயக்குனர் கடந்த 1-ந்தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டார். இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. பழனியப்பன் வழக்கு தொடர்ந்தார்.

அதில், தனியார் கல்வி நிறுவனங்கள் மீது அதிகார வரம்பு இல்லாமல் மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. சி.பி.எஸ்.இ. போன்ற மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த முடியாது என்று வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கும் பிரிவில் கூட, பொதுநலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கல்விக்கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது.

கல்விக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்பது கருப்பு பணம் அல்ல. அதுகுறித்த விவரங்களை வெளியிடலாமே? என்று மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். பின்னர், வருகிற 18-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com