கூட்டத்தை கூட்டிவிட்டால் இந்தியாவின் தலைவிதியை மாற்ற முடியுமா? விஜய் குறித்து வீரபாண்டியன் ஆவேசம்


கூட்டத்தை கூட்டிவிட்டால் இந்தியாவின் தலைவிதியை மாற்ற முடியுமா? விஜய் குறித்து வீரபாண்டியன் ஆவேசம்
x

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று வீரபாண்டியன் கூறினார்.

தேனி,

தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் 86 ஆயிரம் நீதிமன்றங்கள், 1.18 லட்சம் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர்மீதும் கூட லஞ்ச வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எவரும் தண்டனை பெற்றதில்லை.நாங்கள் 100 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் இருக்கலாம். ஆனால் எங்களை அழிக்க யாராலும் முடியவில்லை. அழியாமல் இருப்பதே, நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவோம் என்பதற்கான அடையாளமாகும். வருகிற தேர்தலில் எங்களைத் தவிர்த்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

ஆனால் இன்றைக்கு திடீர் திடீரென அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகின்றன. ஒருவரின் பின்னால் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடுகிறது. ஆனால் அந்த தலைவரால் இந்தியாவின் தலைவிதியை மாற்ற முடியுமா? நாம் அனைவரும் மகாத்மா காந்தியை தேசபிதா என்கிறோம். ஆனால் அவரால் கூட இந்தியாவின் தலைவிதியை மாற்ற முடியவில்லை. நீங்கள் முதலாளித்துவப் பக்கமா அல்லது பொதுஉடைமைப் பக்கமா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதனை வெளியில் சொல்வதிலேயே அவருக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது.தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. வருகிற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க. தனித்து நின்றால் கூட தி.மு.க. கூட்டணிக்கு போட்டியை உருவாக்க இயலும். ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் எங்களுக்கு வெற்றி எளிதாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story