அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர முடிவா? முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மறுப்பு

அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர முடிவா? என்பதற்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மறுத்துள்ளார்.
அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர முடிவா? முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மறுப்பு
Published on

சென்னை,

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட விரிசலுக்கு பிறகு சசிகலா தலைமையிலான அணியில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் இணைந்தனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க. என்ற கட்சியை வழி நடத்தி வருகிறார். அவருடன் இணைந்து செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க வழக்கில், செந்தில்பாலாஜி,, பழனியப்பன் உள்ளிட்டோரின் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதையடுத்து அவர்கள் இருவரும் டி.டி.வி.தினகரன் மீது விரக்தியில் இருப்பதாகவும், அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அரசியல் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் பழனியப்பன் இந்த செய்தி வதந்தி என்றும், யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோவில் தோன்றி பேசியதாவது:-

நான் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தலைமையை ஏற்று நடந்தவன். ஜெயலலிதாவுக்கு பின்னர் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் தலைமையை ஏற்று தூய தொண்டனாக, அப்பழுக்கற்ற தொண்டனாக முழுமனதுடன் செயலாற்றி வருகிறேன்.

வேண்டும் என்றே சில விஷமிகள் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், நான் அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேரப்போவதாக தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முற்றிலுமாக மறுக்கிறேன்.

நான் அ.ம.மு.க. வளர்ச்சிக்காகவும், கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எதிர்காலத்தில் தமிழகத்தை ஆளக்கூடிய வகையில் அவருக்காக நான் அயராது பாடுபட்டு வருகிறேன். இன்று கூட(நேற்று) என்னுடைய பாப்பாரெட்டி தொகுதியில் பூத் குழு அமைக்கிற பணியில் மாலை 5 மணி வரை ஈடுபட்டிருந்தேன்.

ஒருபோதும் இதுபோன்ற தவறை நான் செய்யமாட்டேன். நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி. சசிகலா, டி.டி.வி.தினகரன் தலைமையில் விசுவாசமிக்க தொண்டனாக செயல்பட்டு வருகிறேன். இந்த வதந்திகளை, பொய் பிரசாரங்களை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com