அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணத்தை 24-ந்தேதிக்குள் செலுத்தாத தனியார் கல்லூரிகளின் இணைப்பு ரத்து; அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணத்தை 24-ந்தேதிக்குள் செலுத்தாத தனியார் கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணத்தை 24-ந்தேதிக்குள் செலுத்தாத தனியார் கல்லூரிகளின் இணைப்பு ரத்து; அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை
Published on

பல்கலைக்கழக முறைகேடு

இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த காலங்களில் கல்வித்துறையில் குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகம், மற்ற பல்கலைக்கழகங்கள், திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அதிகாரிகளை அழைத்து துறையின் செயலாளரும், நானும் ஆலோசனை நடத்தினோம்.அண்ணா பல்கலைக்கழகத்தில், முதல்-அமைச்சர் ஏற்கனவே சொன்னதை போல், அங்கு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் தேர்வு எழுதலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இணைப்பு ரத்து

மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தேர்விற்கான கட்டணத் தொகையை 23 தனியார் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்திடம் செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்தாவிட்டாலும் தேர்வு எழுத அந்த கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.23 கல்லூரிகளும் மாணவர்களுக்கான தேர்வுக்கட்டணத்தை வரும் 24-ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) அண்ணா பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த கல்லூரிக்கான இணைப்பு ரத்து செய்யப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும். தேர்வு எழுத மாணவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விரிவுரையாளர் நியமன முறைகேடு

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த காலங்களில் தவறுதலாக பணி நிரந்தரம் செய்யப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. அவர்கள் 5 ஆயிரம் பேர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் டி.என்.பி.எஸ்.சி. போன்ற தேர்வாணையம் மூலமாக அல்லாமல், கடந்த காலங்களில் குழு அமைத்துவிட்டு, அமைச்சர் அளவில் தவறுகள் நடந்ததாக புகார்கள் வந்தன.கவுரவ விரிவுரையாளர்களை முறைப்படுத்தி முறையாக நியமனம் செய்ய உள்ளோம். யு.ஜி.சி. கூறும் தகுதியின்படி நடத்தப்படும். எனவே அவர்கள் யாரும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். இதில் பணம்

வாங்குவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

புதிய கல்விக்கொள்கை

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை என்பது மாநில உரிமைகளின் தலையீடாக உள்ளது. எனவேதான் அதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை நுழையாமல் தடுக்க துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்விற்கான அட்டவணை விரைவில் வெளியாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை பெறப்பட்ட பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com