குட்கா, பான்மசாலாவுக்கு தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

குட்கா, பான்மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
குட்கா, பான்மசாலாவுக்கு தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
Published on

குட்காவுக்கு தடை

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.ஆண்டுதோறும் இது சம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

தடை ரத்து

இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால் அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் (ஜனவரி) 25-ந்தேதி தீர்ப்பு கூறியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், 'குட்காவுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுகிறோம்' என்று தெரிவித்தார். இதன்மூலம் குட்கா, பான் மசாலாவுக்கு தடை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேல்முறையீடு

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே புகையிலை நிறுவனங்களின் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இதற்கிடையே தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com