

சென்னை,
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் தொடர்ந்து ஐந்து நாட்களாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள், தினசரி பயணிகள் அனைவரின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே என்பது மாநில அரசின் கீழ் அல்ல; இது மத்திய அரசின் பொறுப்பு.
இன்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் சொல்ல வேண்டிய நேரம் இது. ஏன் தொடர்ந்து சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன?. ஏன் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை?. ஏன் பொதுமக்களுக்கு சரியான தகவல் வழங்கப்படவில்லை?. தமிழகத்தில் பாஜக எம்பிக்கள் இல்லை என்று விமர்சனம் செய்வதற்கு பதிலாக, மத்திய அரசு தனது பொறுப்பை ஏற்க வேண்டும். மக்கள் நலனை விட அரசியல் முக்கியமா? .
சென்னை மக்களின் துயரத்தை உடனடியாக தீர்க்க ரத்து செய்யப்பட்ட மின்சார ரெயில்களை மீண்டும் இயக்கவும் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை உடனடியாக செய்யவும் பயணிகளுக்கு தெளிவான விளக்கம் வழங்கவும் பொதுமக்கள் சிரமப்படும்போது மௌனம் காக்கும் ரெயில்வே மந்திரியின் அலட்சியத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் சேவை என்பது அரசியல் சுலோகம் அல்ல; அது பொறுப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.