பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு தேர்தல் ரத்து - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு

பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்து பாதுகாப்பு அமைச்சம் உத்தரவிட்டுள்ளது.
பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு தேர்தல் ரத்து - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு
Published on

சென்னையை அடுத்த பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களும் வசிப்பதால் சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற 7 ராணுவ அதிகாரிகளும், 7 மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நிர்வாகம் செயல்படும்.

இந்த போர்டுக்கு சென்னை மண்டல ராணுவ பிரிக்கேடியர் தலைவராகவும், மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் துணை தலைவராகவும் இருப்பார்கள். போர்டு நிறைவேற்றும் திட்டங்களை செயல்படுத்த கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாக செயல் அதிகாரி இருப்பார். இங்கு நிறைவேற்றும் பணிகளுக்கு ராணுவ அமைச்சகத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படும்.

இந்தியா முழுவதும் 62 கண்டோன்மெண்ட் போர்டுகள் உள்ளன. இதில் 56 கண்டோன்மெண்ட் போர்டுகளில் மக்கள் பிரதிநிதிகள் கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தில் பரங்கிமலை- பல்லாவரம் மற்றும் வெல்லிங்டன் ஆகிய 2 கண்டோன்மெண்ட் போர்டுகள் உள்ளன.

சென்னை பரங்கிமலை- பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டில் 7 வார்டுகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு கண்டோன்மெண்ட் போர்டுக்கு தேர்தல் நடந்தது. அந்த போர்டின் பதவி காலம் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிந்து விட்டது.

இதனால் கண்டோன்மெண்ட் போர்டுக்கு தேர்தல் நடத்த கூடிய வகையில் பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கப்பட்டன. அதில் 4-வது வார்டு பெண் (தாழ்த்தப்பட்டோர்), 6-வது வார்டு பெண் (பொது) என குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கண்டோன்மெண்ட் போர்டுக்கு ஏப்ரல் மாதம் 30-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த உத்தரவையடுத்து தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கண்டோன்மெண்ட் போர்டுக்கு நடக்க இருந்த தேர்தலை ரத்து செய்தும், பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறி உள்ளது.

இதையடுத்து பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு நடைபெற்று வந்த தேர்தல் பணிகள் நிறுத்தப்பட்டதாக கண்டோன்மென்ட் போர்டுஅதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com