

சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மராட்டிய மாநில அரசால் மராத்தா வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 16 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பது மட்டுமின்றி, சமூகநீதிக்கு எதிராகவும் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது.
எனவே, ஓ.பி.சி. பிரிவினருக்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதாவது, புதிதாகப் பொறுப்பேற்கும் தி.மு.க. அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து அதிக எண்ணிக்கை கொண்ட நீதிபதிகளின் அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.