வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் இடமாற்றம் ரத்து; டாக்டர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை - கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வேலைநிறுத்த போராட்டம் நடத்த டாக்டர்களுக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ள ஐகோர்ட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் இடமாற்றம் ரத்து; டாக்டர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை - கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யின் அடிப்படை யில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

அதேநேரம், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் பலரை பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் பல டாக்டர்களுக்கு குற்றச் சாட்டு குறிப்பாணையை யும் (சார்ஜ் மெமோவை யும்) வழங்கியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் கள் பலர் வழக்கு தொடர்ந் தனர்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, டாக்டர்களை இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு மட்டும் தடை விதித்தார்.

இதையடுத்து இந்த வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் சி.கனகராஜ், எம்.ஆர்.ஜோதிமணி உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளடர் ஏ.என். தம்பித்துரை வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலத்தில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கை விசாரித்த அம்மாநில ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச், உயிர் இல்லா எந்திரங்களை செயல்படுத்த மாட்டோம் என்று தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபடுவது போல, உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது. உயிர் பறிபோய் விட்டால், அதை மீட்டெடுக்க முடியாது என்று கூறியுள்ளது.

இதுபோல பிற மாநில ஐகோர்ட்டுகளும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளன. இந்த தீர்ப்புகளின்படி, டாக்டர்களின போராட்டம் என்பது சட்ட விரோதமானது ஆகும்.

மேலும் டாக்டர் தொழிலின் அடிப்படை தத்துவமே பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதுதான். அப்படி இருக்கும்போது நோயாளிகளின் உயிருடன் விளையாடக் கூடாது. எனவே, இந்த வழக்கில் ஐகோர்ட்டின் முடிவு என்னவென்றால், எந்த ஒரு சூழ்நிலையிலும் டாக்டர்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் உரிமை இல்லை என்பதாகும்.

டாக்டர்களுக்கு போராட்டத்தில் ஈடுபட உரிமை இல்லை என்று ஒருபுறம் முடிவு செய்தாலும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக முன்வைத்து உள்ளனர். பல முறை அமைச்சர், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவாதம் அளித்து உள்ளார். ஆனால், அந்த உத்தரவாதங்கள் எல்லாம் நிறைவேற்றப்படவில்லை என்பதால் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த போராட்டம், வேலைநிறுத்தம் ஆகியவை ஒரே நாளில் திட்டமிடப்படவில்லை. நீண்ட கால கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில்தான் போராட்டம் தொடங்கியுள்ளது. அதேநேரம், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அதன் விளைவாக நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மக்கள் நலனை காப்பதுதான் மக்கள் நல அரசின் கடமை ஆகும். மக்களின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். மக்களின் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் தொடர்பான முடிவை அரசு தெரிவிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டுவிடக் கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்படும்போதுதான் போராட்டம் தொடங்கும்.

டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல நோயாளிகளின் உயிர் கேள்விக்குரியாகிவிட்டது.

அதே நேரத்தில் தங்கள் கோரிக்கை தொடர்பாக அறிவிப்பு வந்தவுடன் 2019-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி போராட்டத்தை டாக்டர் கள் வாபஸ் பெற்றனர்.

அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சங்க நிர்வாகிகள், போராட்டத்தின்போது முன்னணியில் இருந்தவர்கள் என 135 டாக்டர் களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சார்ஜ் மெமோ, பணியிட மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் 18 ஆயிரம் டாக்டர்கள் பங்கேற்ற நிலையில் 135 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அவர்களை தண்டிக்கும் நோக்கமே தவிர வேறு ஒன்றுமில்லை. மற்ற நிறுவனங்கள் பணியாளர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு அரசு உதாரணமாக இருக்க வேண்டும். எனவே, மனு தாரர்களுக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோ, பணி இடமாற்றம் ஆகிய உத்தரவுகளை ரத்து செய்கிறேன்.

ராமாயணத்தில் சுக்ரீவனுக்கு ராமர் அறிவுரை கூறும்போது, அரசன் ஸ்தானத்தில் இருந்து ஆட்சி செய்வதல்ல சரியான ஆட்சி. தாய் குழந்தையை கவனிப்பதுபோல், குழந்தையாக மக்களை கவனித்து ஆட்சி செய்வதுதான் சிறந்த ஆட்சி என்று கூறி உள்ளார்.

இதுபோல்தான், அரசும் இருக்க வேண்டும். அரசு டாக்டர்களை அரவணைத்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கில் வெற்றி, தோல்வி என்ற நிலை எடுக்காமல் மக்கள் நலன் கருதி டாக்டர்களுடன் பேசி உரிய தீர்வை அவர்களுக்கு அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com