கஞ்சா போதை: நடுரோட்டில் 2 இளைஞர்கள் அடித்துக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு

கஞ்சா போதையில் 4 இளைஞர்கள் சேர்ந்து அரங்கேற்றிய கொடூர கொலையை, வாகன ஓட்டிகள் செல்போனில் படம்பிடித்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் ஒட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 32). இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். பொங்கல் விடுமுறையையொட்டி பார்த்திபன் தனது நண்பர்களான சுகுமார், கேசவன் ஆகியோருடன் ஆந்திராவுக்கு சுற்றுலா சென்றார்.
அவர்கள் 3 பேரும் சுற்றுலா முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் மணவாளநகர் ஒட்டிக்குப்பம் பழைய பேருந்து நிலையம் அருகே அவர்கள் வந்தபோது, சாலையின் நடுவில் 4 வாலிபர்கள் அமர்ந்து போதையில் ரகளை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போதையில் இருந்த இளைஞர்கள் 4 பேரும் சேர்ந்து, மோட்டார் சைக்கிளில் இருந்த பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கத் தொடங்கினர். இதில் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், போதை இளைஞர்கள் அருகில் இருந்த சிமெண்ட் கல்லை எடுத்து 3 பேரின் தலையில் போட்டனர்.
இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சுகுமார் மற்றும் கேசவன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். நடுரோட்டில் வாகனங்கள் ஒருபுறம் சென்று கொண்டிருந்த சமயத்தில், கஞ்சா போதையில் 4 இளைஞர்கள் சேர்ந்து அரங்கேற்றிய இந்த கொடூர கொலை சம்பவத்தை, அங்கிருந்தவர்கள் சிலர் தங்கள் செல்போனில் படம்பிடித்தனர்.
இதற்கிடையில், அந்த வழியாக சென்றவர்கள் சிலர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுகுமார் உயிரிழந்தார். கேசவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரட்டை கொலை சம்பவம் திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மணவாளநகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி, மணவாளநகர் பகுதியை சேர்ந்த ஜவகர், வினோத் குமார், ஜோதீஸ் மற்றும் நீலகண்டன் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கைதான ஜவகருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதே போல், நீலகண்டனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரும் போலீஸ் விசாரணையின்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மற்ற இருவருக்கும் உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 4 பேருக்கும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






