தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது

கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது.
தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது
Published on

தூத்துக்குடி, தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாளமுத்துநகர், கோவில்பிள்ளைவிளை சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான ராஜேஷ் (வயது 39), பிரான்சிஸ்(22) ஆகிய 2 பேரை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக மேற்சொன்ன போலீசார் அவர்கள் 2 பேரையும் தாளமுத்துநகர் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேற்சொன்னவாறு துரிதமாக செயல்பட்டு கஞ்சா ஆயில் வைத்திருந்த நபர்களை கைது செய்தும், சொத்துக்களை பறிமுதல் செய்தும் சிறப்பாக பணியாற்றிய தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "DrugFreeTN எனும் செயலியை உருவாக்கியுள்ளது. அந்த செயலியின் மூலம் பொதுமக்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை பெயர் தெரியாதவாறு (anonymous) தயங்காமல் புகார் அளிக்கலாம். மேலும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com