

மதுரை,
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் பக்தர்களை கட்டுப்பாட்டுடன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் சாமி வீதி உலாவை சித்திரை வீதியில் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே, விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவுவதை தடுப்பதற்காகவே, கோவில் திருவிழாக்களில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் விழாவைக் காண மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், நாள்தோறும் விழா முடிந்த பிறகும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் சித்திரை திருவிழாவின் போது சிறப்பு பாஸ், வி.ஐ.பி. பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம் என நீதிபதிகள் கேட்டுகொண்டனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்.