

சென்னை,
என்.எல்.சி., தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தடை கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.தண்டபாணியிடம் என்.எல்.சி. தரப்பு வக்கீல் நித்தியானந்தம் முறையிட்டார்.
அப்போது நீதிபதி, வயல்களில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு வக்கீல், ''இந்த நிலம் 20 ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தப்பட்டு விட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இழப்பீடும் வழங்கப்பட்டு விட்டது. தற்போது நிலத்தை எடுக்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' என்றார்.
காத்திருக்க முடியாதா?
உடனே நீதிபதி, ''20 ஆண்டுகள் காத்திருந்த என்.எல்.சி. நிர்வாகம் 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? அப்படி காத்திருந்தால், நிலத்தில் விதைக்கப்பட்ட நெல்லை விவசாயி அறுவடை செய்திருப்பார். பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசரை விட்டு கால்வாய் தோன்டும்போது, வேதனையாக இருக்கிறது. இப்போது அமெரிக்காவில் அரிசிக்கு அல்லாடுகின்றனர். நம்முடைய அடுத்த தலைமுறைக்கு இதே நிலை ஏற்படப்போகிறது. அவர்கள் அரிசிக்கும், காய்கறிக்கும் அல்லாட போகிறார்கள்.
நமக்கு தேவையான அரிசி, காய்கறிக்கு என்.எல்.சி., நிர்வாகம் என்ன செய்ய போகிறது? என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
மின்சாரம் தேவை
அதற்கு வக்கீல், ''இந்த கோர்ட்டு அறையில் உள்ள ஏ.சி.க்கு கூட என்.எல்.சி., மின்சாரம் தேவைப்படுகிறது'' என்றார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ''பூமியில் இருக்கக்கூடிய அனைவரும் ஏசி காற்றில் வாழ்வதில்லை. புங்கை மர காற்றிலும், வேப்ப மர காற்றிலும் இளைப்பாறுபவர்கள் ஏராளமாக உள்ளனர்'' என்று பதில் அளித்தார்.
இதையடுத்து இந்த அவசர வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். நெய்வேலி போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறி போலீஸ் தரப்பில் வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ''என்.எல்.சி., நி றுவனம் மற்றும் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஆகஸ்டு 3-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், போராட்டத்துக்கு தடை எதுவும் விதிக்கவில்லை.
மிகப்பெரிய பஞ்சம்
பின்னர் நீதிபதி கூறியதாவது:-
பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகைதான் வருகிறது. வாடிய பயிரைப் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் ஊருக்கு அருகில் பயிர்கள் அழிக்கப்படுவதை பார்க்க முடியவில்லை.
நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. நிலத்துக்குரிய இழப்பீடு பெற்றாலும், பயிர்களை அழிக்கும்போது விவசாயிகளுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
நாமெல்லாம் மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்க போகிறோம். அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம். அப்போது தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி பயன்படாது.
பருவ மழை
அணைக்கரையை ஒட்டி கொள்ளிடம் நோக்கி பாயும் நதியின் அழகை பொன்னியின் செல்வன் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தோண்டி தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் பெரும் கவலையாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கை வைத்தால் தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய பருவ மழை சுத்தமாக நின்றுவிடும்.
கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு எத்தனை மடங்கு இழப்பீடு வழங்கினால், அந்த பணத்தை வைத்து விவசாயிகள் என்ன செய்வார்கள்? ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயிகள் மகாராஜா போல் வாழ்ந்தனர். அதையும் பறித்துக் கொண்டால் என்ன செய்வது?
இவ்வாறு அவர் கூறினார்.