

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நுங்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை தர்மபுரி மாவட்டம் நம்மாண்டலி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 28) என்பவர் ஓட்டினார். லாரி, திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டி மேம்பாலத்தில் திடீரென்று என்ஜின் பழுதாகி நின்றது. இதையடுத்து மெக்கானிக்கை வரவழைத்து பழுதை கனகராஜ் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சேலத்தை நோக்கி சென்ற கார் லாரியின் ஓரத்தில் அமர்ந்திருந்த கனகராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், கூம்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் எருமைபாளையம் கலரம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (35) என்பவர் மீது கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.