

சண்டிகர்,
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள கோல்ப் கோர்ஸ் சாலையில், சியா என்ற இளம்பெண் தனது ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் சில ரைடர்கள் தங்களது பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சியா அருகே ஒரு வெள்ளை நிற கார் வந்துள்ளது. அந்த காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சியாவிடம் தவறான செய்கைகளை செய்து அத்துமீறிய நிலையில், சியா அவர்களை கண்டித்துவிட்டு பைக்கை வேகமாக முன்னோக்கி ஓட்டிச் சென்றார்.
இந்நிலையில், சியாவை பின்தொடர்ந்து வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் சியாவின் பைக்கை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றது. இதில் பைக்கில் இருந்து சியா தூக்கி வீசப்பட்டார். அவரது பைக் காருக்கு அடியில் சிக்கி சில மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.
சியாவுடன் வந்த அவரது நண்பர்கள் சம்பந்தப்பட்ட காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் நிற்காமல் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சியா மற்றும் அவரது நண்பர்களின் ஹெல்மெட்டுகளில் பொருத்தப்பட்டிந்த கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவத்திற்கு பிறகு சியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியபோது, சியா மீது மோதிய கார் மணீஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஆனால் மணீஷை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தான் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருவதாகவும், சம்பவத்தின்போது தனது காரை நண்பர் ஒருவர் வாங்கி ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.