சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு
Published on: 

குன்றத்தூர்,

குன்றத்தூர் அருகே 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் தலைகுப்புறக் கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவன் ஓட்டிய கார்

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. பகுதியை சேர்ந்த பாபுவின் மகன் நரேன் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நரேன் தனது நண்பர்களான சலைத் ராஜ் (17), அரவிந்த் (17), கேசவ் (17), எபேந்திரன் (17) ஆகியோருடன் காரில் தாம்பரம் சென்றார். அங்கு டீ குடித்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்புவதற்காக தாம்பரம்- மதுரவாயல் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சலைத் ராஜ் ஓட்டியதாக தெரிகிறது. குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சாலையில் அதிவேகமாகச் சென்ற கார், திடீரென சலைத் ராஜின் கட்டுப் பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவர் மீது ஏறியது. பின்னர் தடுப்பின் நடுவில் இருந்த மரத்தின் மீது மோதிய கார், எதிர்ப்புறச் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

உயிரிழப்பு

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் காயமடைந்தனர். விபத்தைப் பார்த்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், காரில் சிக்கியவர்களை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், காயமடைந்த 4 சிறுவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், நரேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, நரேனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 18 வயது பூர்த்தியடையாத மாணவர்கள் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com