பல்லடம் அருகே கார் ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி

பல்லடம் அருகே கார் ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்,6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பல்லடம் அருகே கார் ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி
Published on

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, கார் - ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

கோவை காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், மூர்த்தி(வயது 51), டேவிட் ராஜ் (33), சுரேஷ் (36), வெள்ளிமலை (33) ஆகிய 4 பேரும் ஜீப்பில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை வெள்ளிமலை ஓட்டி வந்தார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடம் அருகே சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மீது ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஜீப்பில் வந்த 4 பேருக்கும், எதிரே வந்த காரில் பயணம் செய்த உடுமலையை சேர்ந்த திராவிடமணி(69), அவரது மனைவி மீனாட்சி (56), மகள் கிருத்திகா (29) ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களில் மூர்த்தி என்பவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த மற்றவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com