

நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழதுவரை குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் (45), தனது காருக்கு பெட்ரோல் நிரப்பச் செல்ல தயாரான நிலையில், அவரது சகோதரர் பால்பாண்டியின் மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து முருகன் காரை அவரிடம் ஒப்படைத்தார்.
துரைப்பாண்டி காரை எடுத்துச் செல்லும்போது, உறவினர்களின் குழந்தைகளான முருகனின் மகள் கன்சிகா (4), தினேஷ் (10), பிரதீப் (9), லித்திஷ் (8) ஆகியோரும் அவருடன் காரில் சென்றனர். பெட்ரோல் நிரப்பி விட்டு ஊருக்கு திரும்பியபோது, களக்காடு மங்கம்மாள் சாலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிறுமி கன்சிகா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிய துரைப்பாண்டி மற்றும் தினேஷ், பிரதீப், லித்திஷ் ஆகிய 4 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக துரைப்பாண்டியை களக்காடு தனியார் மருத்துவமனையிலும், தினேஷை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும், பிரதீப் மற்றும் லித்திஷை நெல்லை அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சிறுவன் துரைப்பாண்டி மற்றும் அவருக்கு காரை வழங்கிய முருகன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.