போலீசார் போட்ட பூட்டை உடைத்து கார் திருட்டு

நாகர்கோவிலில் பட்டப்பகலில் போலீஸ் நிலையம் முன் போலீசார் போட்ட பூட்டை உடைத்து காரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் போட்ட பூட்டை உடைத்து கார் திருட்டு
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பட்டப்பகலில் போலீஸ் நிலையம் முன் போலீசார் போட்ட பூட்டை உடைத்து காரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோட்டார் சைக்கிள் மீது மோதல்

நாகர்கோவில் கோட்டார் சுமைதாங்கி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 24-ந் தேதி மாலையில் வைத்தியநாதபுரம் முத்தாரம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் செந்தில்குமாருக்கு கால் முறிந்தது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் செந்தில்குமார் மீது மோதிய கார் யாருடையது? எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கார் திருட்டு

இந்த நிலையில் செந்தில்குமார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் நேற்று பகலில் கோட்டார் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்தது. இதை செந்தில்குமாரின் உறவினர்கள் பார்த்து புலனாய்வு பிவு போலீசில் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து காரை ஆய்வு செய்தனர். அப்போது காரில் யாரும் இல்லை. இதைத் தொடர்ந்து காரை எடுக்க முடியாதபடி காரின் முன் மற்றும் பின் சக்கரங்களை போலீசார் (வீல் லாக்) பூட்டினர்.

பின்னர் காரின் பதிவு எண் மூலம் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மதியம் 3.30 மணி அளவில் 2 மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கார் சக்கரத்தில் போலீசார் பூட்டு போட்டிருப்பதை கண்டனர். தொடர்ந்து கார் சக்கரத்தில் போட்டிருந்த பூட்டை கல்லால் உடைத்து பூட்டை அங்கேயே போட்டுவிட்டு காரை எடுத்துச் சென்றனர்.

வீடியோ வைரல்

போலீஸ் நிலையம் முன் நிறுத்தியிருந்த காரையே மர்ம நபர்கள் துணிச்சலுடன் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் கோட்டார் போலீஸ் நிலையம், போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகிய 3 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அங்கு எப்போதும் போலீசார் இருப்பார்கள். அப்படி இருந்தும் காரில் போட்டிருந்த பூட்டை உடைத்து போட்டுவிட்டு காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.காரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் மர்ம நபர்களின் உருவம் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com