கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்துபவரின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவரின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்துபவரின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை,

சென்னை தாம்பரம் அருகே கேம்ப் ரோட்டில் நேற்று முன்தினம் ஒரு கார் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக சாலையில் சென்றது. அந்த கார் முதலில் சாலை தடுப்புச்சுவரில் மோதி, பின்னர் பிற வாகனங்கள் மீதும் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்த செய்தி, ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்குமுன் இந்த விபத்து குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். அவர் கூறுகையில், தாம்பரத்தில் நேற்று முன்தினம் நடந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. சாலையில் சென்று கொண்டிருந்த 4 இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று வருத்தம் தெரிவித்தார்.

மேலும் அவர், தற்போது வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகளை தடுக்க போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? என்று அரசு வக்கீல் முகமது ரியாசிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து நீதிபதி, கவனக் குறைவாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவரின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

பின்னர், வேகமாக, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச்சென்று மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனை 2 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை தமிழக போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வருகிற 17-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com