

ஆந்திர மாநிலம், நகரியிலிருந்து கோழிகளை ஏற்றி வர ஒரு சரக்கு வேன் சித்தூருக்கு புறப்பட்டது. வழியில் பள்ளிப்பட்டு அருகே உள்ள நெலவாய் என்ற இடத்தில் லாரி அதிவேகமாகச் வந்தது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சின்னப்பா (வயது 73) என்பவர் தனது மனைவி சுகுணாவை பஸ் ஏற்றுவதற்காக சாலை ஓரத்தில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்தும், கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் தாறுமாறாக ஓடி சின்னப்பா மீது மோதியது. மேலும் சரக்கு வேன் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த இருமரங்களுக்கு இடையே சிக்கி முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் சின்னப்பா இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சரக்கு வேனின் முன்பக்கத்தில் இருந்த டிரைவர் பாபு உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் எஸ்.ஆர்.புரம் போலீசார் விரைந்து சென்று சரக்கு வேனின் முன்புறத்தில் சிக்கிக் கொண்ட 3 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சின்னப்பா ஆகியோரை மீட்டு சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எஸ்.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.