சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு அதிக வார்டுகளை ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கியுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு அதிக வார்டுகளை ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் அந்த பிரிவுகளின் பெண்களுக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 2016-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின்படி 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். அதன்படி பார்த்தால், 168 இடங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 84 இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் பெண்களுக்கு கூடுதலாக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒற்றைப்படை

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின்படி, 50 சதவீதம் குறையாமல் பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்க வேண்டும். ஒரு மண்டலத்தில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் வார்டுகள் வரும்போது, அதில் கூடுதலாக வரும் ஒரு வார்டு பெண்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும். ஒரு மண்டலத்தில் 11 வார்டுகள் என்றால், 6 வார்டுகள் பெண்களுக்கும், 5 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பெண்களுக்கு கூடுதலாக வார்டுகள் ஒதுக்கப்படுகிறது. இந்த வழக்கிற்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று வாதிட்டார்.

சரிசமமாக

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், 168 வார்டுகளில் 50 சதவீதம் என்றால் சரிசமமாக பிரிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு மண்டல வாரியாக வார்டுகளை பிரிப்பதால் பெண்களுக்கு அதிக இடம் கிடைக்கிறது. எனவே, மண்டல வாரியாக வார்டுகள் பிரிக்காமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரி சமமாக பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கிற்கு 2 வாரத்துக்குள் அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com