அண்ணாமலை மீது வழக்கு: பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் -குஷ்பு பரபரப்பு பேச்சு

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை மீது வழக்கு: பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் -குஷ்பு பரபரப்பு பேச்சு
Published on

சென்னை,

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்காக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார், பா.ஜ.க. பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

குஷ்பு பரபரப்பு பேச்சு

ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பரபரப்பாக பேசியதாவது:-

அண்ணாமலை மீதான பயத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியும் என்றால் அது பா.ஜ.க மட்டும்தான். வட மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு புத்தியே இல்லை என்று தி.மு.க அரசின் முக்கிய நிர்வாகிகள் பேசி இருக்கிறார்கள்.

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் இந்தியாவின் அடுத்த பிரதமராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்கள். மடியில் கனம் இருந்தால்தான் நெஞ்சில் பயம் இருக்கும். ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பா.ஜ.க.வுக்கு மட்டும்தான் இருக்கிறது.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை பேசும்போதும் தமிழ் மண், தமிழ் மொழி, தமிழ் மக்கள் என மனதார பேசுகிறார். ஆனால் தி.மு.க. அரசோ இந்தி திணிப்பு என்ற பிரச்சினையை உருவாக்கி மக்களை திசை திருப்ப பார்க்கிறது. கர்நாடகாவில் இந்தி கற்றுக்கொள்பவர்கள் 65,000 பேர். கேரளாவில் இந்தி கற்றுக்கொள்பவர்கள் 21,000 பேர். ஆனால் தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்ள பதிவு செய்திருப்பவர்கள் 2,35,000 பேர். தமிழ்நாட்டு முதல்-அமைச்சருக்கு பிரதமர் ஆகும் கனவு இருந்தால் அவருக்கு இந்தி டியூஷன் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com