

மதுரை,
கூட்டுறவு சங்க விதிகளின்படி கூட்டுறவு சங்க நிர்வாகங்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவை தள்ளுபடி செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த பிரகலாதன் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-
கூட்டுறவு சங்க விதிகளின்படி கூட்டுறவு சங்க நிர்வாக குழுக்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் இந்த பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இது கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் கூட்டுறவு சங்கங்களை கலைக்கவோ, நிர்வாகக் குழுக்களை நீக்கவோ கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவானது ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மசோதாவாக இருக்கும் நிலையில் அதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. மசோதா சட்டமாகும் போது தான் அதனை எதிர்த்து வழக்கு தொடர முடியும். மனுதாரர் முன்கூட்டியே நிவாரணம் கேட்டு நீதிமன்றம் வந்திருக்கிறார். எனவே பிரகலாதனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.