அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான வழக்கு; காவல்துறை விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான வழக்கு; காவல்துறை விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என லஞ்சஒழிப்புத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னை,

கடந்த 2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனிடையே, கடந்த 2024-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. வழக்கை வேலூருக்கு மாற்ற மறுத்ததை எதிர்த்து, துரைமுருகன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என லஞ்சஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 24-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது ஏன்? என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

1 More update

Next Story