மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டில் அமைச்சர் வேலுமணி வாபஸ்

ஐகோர்ட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கினை அமைச்சர் வேலுமணி வாபஸ் பெற்றார்.
மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டில் அமைச்சர் வேலுமணி வாபஸ்
Published on

சென்னை,

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர். ஆனால், அந்த குற்றவாளிகளை காப்பாற்ற நான் முயற்சிப்பதாக நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி தி.மு.க. தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒப்பந்த பணிகள் எல்லாம் எனது உறவினர்களுக்கு வழங்குவதாக ஆதாரமற்ற அவதூறு பிரசாரம் செய்கிறார். எனவே, என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மு.க.ஸ்டாலின், எனக்கு ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் தன்னை பற்றி அவதூறாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்கவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றை அமைச்சர் வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை கேட்ட இடைக்கால மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜா சீனிவாசன் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை திரும்பப்பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com