பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வழக்கு

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வழக்கு
Published on

சென்னை,

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை அசோக்நகர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், பாலியல் குற்றவாளி என்று கூறி அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜகோபாலனின் மனைவி சுதா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

2015-ம் ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், என் கணவர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆபாச இணையதளம்

அதாவது, ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் வந்ததாக அந்த மாணவி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், 2015-ம் ஆண்டு ஆன்லைன் வகுப்பு நடைபெறவே இல்லை.

அவருடைய தோழிகளுக்கு ஆபாச இணையதள லிங்கை' ராஜகோபாலன் அனுப்பியதாக அந்த தோழிகள் சொன்னதாக இந்த மாணவி புகாரில் கூறியுள்ளார். ஆனால் அவரது தோழிகள் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. அதாவது செவிவழியாக வந்த தகவலின் அடிப்படையில் கூறிய புகாரின்பேரிலும், 5 ஆண்டுகள் காலதாமதமாக கொடுத்த புகாரின் அடிப்படையிலும் என் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்பு எந்த ஒரு வழக்குகளும் இல்லாதநிலையில், என் கணவரை பாலியல் குற்றவாளி என கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். போலீசாரின் இந்தச் செயல் சட்டவிரோதமானது.

பதில் அளிக்க வேண்டும்

என் கணவரை ஜூன் 24-ந் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தாமதமாக, ஜூலை 5-ந் தேதிதான் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே என் கணவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த கமிஷனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து உள்துறைச் செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com