

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இதற்கிடையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மொத்தம் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதைபோல திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான 4 தேர்தல் வழக்குகளும் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று பட்டியலிடப்பட்டது. அப்போது தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். இதைபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிரான தேர்தல் வழக்குகளிலும் அவர்கள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.