எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சியா..? ஐகோர்ட்டு காட்டம்

ஓய்வுபெற்ற பொதுத்துறை செயலாளர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சியா..? ஐகோர்ட்டு காட்டம்
Published on

சென்னை,

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

விசாரணை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான 98 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில், அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பொதுத்துறை செயலாளருக்கு கடிதம்

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், சில விளக்கங்களை கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்ததாகவும், இதுசம்பந்தமாக கடந்த பிப்ரவரி 27-ம் தேதி விளக்கம் அளித்து, பொதுத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காணொலி காட்சி மூலம் ஆஜர்

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் இந்த விவகாரம், பொதுத்துறை செயலாளரிடம் நிலுவையில் உள்ளது. அதுகுறித்து பொதுத்துறை தரப்பில் எந்த விளக்கமும் இல்லை என தெரிவித்த நீதிபதி, கடந்த ஐந்து மாதங்களாக பொதுத்துறை செயலாளரிடம் இந்த கோப்புகள் நிலுவையில் வைத்தது ஏன் என அப்போது பொதுத்துறை செயலாளராக பதவி வகித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர், காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

நீதிபதி கண்டனம்

அதேபோல, கோப்புகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து தற்போது பொதுத்துறை செயலாளரும், இதுசம்பந்தமாக விளக்கமளித்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் சட்டமன்ற தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என கண்டனம் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com