கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஆராய்ச்சி மாணவி ஜீன் ஜோசப் என்பவர் பட்டத்தை பெற மறுத்து, துணைவேந்தரிடம் பெற்றுக் கொண்டார்.
மதுரை,
திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா 13.8.2025 அன்று நடந்தது. அந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.அப்போது அவரிடம் இருந்து ஆராய்ச்சி மாணவி ஜீன் ஜோசப் என்பவர் பட்டத்தை பெற மறுத்து, துணைவேந்தரிடம் பெற்றுக் கொண்டார்.
சட்டப்படி, வேந்தர் தான் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆவார். வேந்தர் இல்லாத போது மட்டுமே துணைவேந்தர் மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியும். எனவே வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்டவிதி மீறல். மேலும் அந்த மாணவி பட்டமளிப்பு விழாவின் போது அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் கருத்துகளை தெரிவித்தார். அப்போது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத கவர்னரிடம் நான் ஏன் பட்டம் பெற வேண்டும் என மாணவி கூறி இருக்கிறார்.
பட்டமளிப்பு விழா அரசியல் போராட்டத்திற்கான களம் அல்ல. மாணவி துணை வேந்தரிடம் இருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல. எனவே அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும் மாணவியிடம் இருந்து பட்டத்தை திரும்ப பெற வேண்டும். பல்கலைக்கழக விதிகளை மீறி மாணவிக்கு பட்டம் வழங்கிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






