சட்டவிரோத குவாரி நடத்தியதாக தவெக பிரமுகர், மகள் உள்பட 3 பேர் மீது வழக்கு

அரசு புறம்போக்கு நிலத்தில் கனிமங்களை வெட்டி எடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
சட்டவிரோத குவாரி நடத்தியதாக தவெக பிரமுகர், மகள் உள்பட 3 பேர் மீது வழக்கு
Published on: 

திருப்பரங்குன்றம்,

சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தியதாக த.வெ.க. பிரமுகர், இவருடைய மகள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கல்குவாரி

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் முருகேசன். திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் 2-வது பீட் கருவேலம் பட்டி ஊராட்சியில் கல்குவாரி நடத்தி வந்தார். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை வெட்டி எடுத்ததாகவும், அனுமதி இன்றி அரசு புறம்போக்கு நிலத்தில் கனிமங்களை வெட்டி எடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் உரிய இடத்தினை வருவாய்த்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் இணைந்து கூட்டு தணிக்கை மேற்கொண்டனர்.

ரூ.7½ கோடி அபராதம்

அப்போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான எம்.சாண்ட் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கனிம பொருட்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்காக குவாரி உரிமையாளர் முருகேசனுக்கு ரூ.7 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரத்து 927 அபராதம் விதித்து திருமங்க லம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இதேபோல அதே பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மற்றொரு கல்குவாரி மற்றும் கிரஷரின் உரிமையாளரான த.வெ.க. பிரமுகர் பாரி மற்றும் அவரது மகள் அபிநயா தென்றல் ஆகியோர் மீது ஆஸ்டின்பட்டி போலீசில் திருப்பரங்குன்றம் தாசில்தார் கிருபாகரன் புகார் அளித்தார்.

3 பேர் மீது வழக்கு

இந்த விவகாரத்தில் பாரி, அபிநயா தென்றல் மற்றும் மேற்கண்ட முருகேசன் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X