

சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாமல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் நேற்று தீபம் ஏற்றப்பட்டது. ஆகம விதிப்படியே தீபம் ஏற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றத்தில் திரண்டு இருந்த இந்து அமைப்பினர், பா.ஜனதாவினர் மற்றும் முருக பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அவர்கள் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் மறுத்துவிட்டனர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
த.வெ.க. அரசை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும், தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரியும் கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். சிலர் போலீசாரின் தடுப்புகளை தாண்டி மலைக்கு செல்ல முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர், பாஜகவினர் மற்றும் பக்தர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேன் மற்றும் பஸ்களில் ஏற்றி கொண்டு சென்றனர். பின்னர் அனைவரும் திருநகர் மற்றும் அருகில் உள்ள மண்டபங்களில் தங்கவைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இன்றி கூட்டம் கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவு செய்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.