டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு: சீமானுக்கு இடைக்கால தடை


டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு: சீமானுக்கு இடைக்கால தடை
x

டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் ஆகியோர் இடையே அண்மை காலத்தில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தனக்கு எதிரான அவதூறான, ஆதாரமில்லாத கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி, ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சீமான் தனக்கு இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை எண்ணிட அனுமதிக்க கோரிய மனு, நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி, வழக்கு எண்ணிடும் நிலையில் உள்ளது.

பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனவும், ஏற்கனவே, மதுரை அமர்வில் அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.இதை ஏற்க மறுத்த நீதிபதி, திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமாருக்கு எதிராக, சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவிற்கு பதில் அளிக்க சீமானுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தார்.

1 More update

Next Story